இந்தியாவுக்கு முதல் பதக்கம் – குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி வாழ்த்து!
ஜப்பானில் நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடரில் வெள்ளியுடன் பதக்க வேட்டையை தொடங்கிய இந்தியா.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமான தொடக்க நிகழ்ச்சிகளுடன் நேற்று அதிகாரப்பூா்வமாகத் தொடங்கிய நிலையில், இன்று பல்வேறு தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, மகளிர் பளுதூக்குதல் 49 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றார்.
ஸ்னாட்ச், கிளீன் மற்றும் ஜெர்க் ஆகிய பிரிவுகளில் மொத்தம் 202 கிலோ எடையை தூக்கி வரலாறு படைத்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடரில் இந்தியா வெள்ளியுடன் தனது முதல் பதக்கத்தை பெற்றுள்ளது. இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் பதக்க பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
பளுதூக்குதலில் இந்தியாவுக்கு முதல் வெள்ளிப் பதக்கம் வென்ற மீரா பாய் சாணுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தனர். பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக வாழ்த்துக்கள் என்றும் அவரது வெற்றி ஒவ்வொரு இந்தியரையும் ஊக்குவிக்கிறது எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
Could not have asked for a happier start to @Tokyo2020! India is elated by @mirabai_chanu’s stupendous performance. Congratulations to her for winning the Silver medal in weightlifting. Her success motivates every Indian. #Cheer4India #Tokyo2020 pic.twitter.com/B6uJtDlaJo
— Narendra Modi (@narendramodi) July 24, 2021
டோக்கியோ ஒலிம்பிக் 2020இல் பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவுக்கான பதக்க எண்ணிக்கையைத் தொடங்கிய மீராபாய் சானுவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என குடியரசு தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Heartiest congratulations to Mirabai Chanu for starting the medal tally for India in the Tokyo Olympics 2020 by winning silver medal in weightlifting.
— President of India (@rashtrapatibhvn) July 24, 2021
ஒலிம்பிக் வரலாற்றில் பளுதூக்குதல் போட்டியில் இந்தியா இதுவரை 2 பதக்கங்களை வென்றுள்ளது. கடந்த 2000 ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் கர்ணம் மல்லேஸ்வரி வெண்கலம் பதக்கம் வென்ற நிலையில், தற்போது மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.