சற்று நேரத்தில் நிதிஷ் குமார் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம்..!
பீகாரில் புதிய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நேற்று அமைந்த நிலையில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை இன்று முதல் கூட்டம் நடைபெற உள்ளது. மாநில தலைமை செயலகத்தில் காலை 11:30 மணியளவில் நடைபெறவுள்ளது.
இந்த அமைச்சரவை கூட்டத்தில் துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் சின்ஹா மற்றும் பிற அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடுகள் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படலாம் என கூறப்படுகிறது. பீகார் அமைச்சரவையில் அதிகபட்சமாக 35 அமைச்சர்கள் இடம் பெறலாம் தகவல் வெளியாகியுள்ளது.
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைத்து முதல்வராக இருந்த நிதிஷ் குமார் அவர்களுடனான கூட்டணியை முறித்து கொண்டு பாஜக உடன் கூட்டணி அமைத்தார். இதனால் நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு ராஜ்பவனில் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் முன்னிலையில் 9-வது முறையாக முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்றார்.
பீகார் சபாநாயகருக்கு எதிராக பாஜக நம்பிக்கையில்லா தீர்மானம்!
நேற்று நிதிஷ் குமாரைத் தவிர மொத்தம் 8 அமைச்சர்கள் பதவியேற்றனர். நேற்று 9-வது முறையாக பீகாரின் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நிதிஷ் குமார், மொத்தம் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர், மீதமுள்ளவர்களின் பெயர்கள் விரைவில் முடிவு செய்யப்படும். விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்.தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறும் பேச்சுக்கே இடமில்லை.
நானும் முன்பு அவர்களுடன் இருந்தேன். நாங்கள் வெவ்வேறு பாதைகளில் சென்றோம், ஆனால் இப்போது நாங்கள் ஒன்றாக இருக்கிறோம், இப்படியே இருப்போம். நான் இருந்த இடத்திற்கு (என்டிஏ) திரும்பி வந்தேன், இப்போது வேறு எங்கும் செல்லும் எண்ணம் இல்லை என உறுதிபடத் தெரிவித்தார்.