மணிப்பூர் முதல்வரின் கான்வாய் மீது துப்பாக்கி சூடு! அடுத்து நடந்தது என்ன?
மணிப்பூர்: இன்று காலை மணிப்பூரின் கங்போபி மாவட்டத்தை அடுத்து கோட்லென் கிராமத்தின் அருகே மணிப்பூர் முதல்வரான பைரன் சிங்கின் கான்வாய் மீது பயங்கரவாதிகள் பலமுறை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூடு தாக்குதல் இன்னும் நீடித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலை பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் போராட்டக்காரர்கள் நடத்தி இருக்கின்றனர் என தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலில் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு உடலில் குண்டு பாய்ந்து காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிகிறது. பாதுகாப்பு வாகனங்கள் கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஜிரிபம் மாவட்டத்திற்கு செல்லும் வழியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
டெல்லியிலிருந்து, இம்பால் செல்லும் முதல்வர் பைரன் சிங், ஜிரிபம் மாவட்டத்தை ஆய்வு செய்ய செல்வதற்குத் திட்டமிட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் அப்போது தான் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது என தெரியவந்துள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று (ஜூன். 8) இதே போல மற்றொரு சம்பவமாக 2 காவல் சோதனைச் சாவடிகள், வனத்துறை அலுவலகம் மற்றும் 70 வீடுகளைப் போராட்டக்காரர்கள் எரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.