2 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம் – ஹரியானா முதல்வர்
தடை விதிக்கப்பட்ட சில நாட்களில், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் 2 மணி நேரம் பட்டாசுகளை வெடிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடவுள்ளனர். இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக தீபாவளி பண்டிகை கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்படும். தீபாவளி என்றாலே பட்டாசு தான் நினைவுக்கு வரும். ஆனால், கொரோனா சூழலை கருத்தில் கொண்டு அண்மையில், சில மாநிலத்தில் பட்டாசு வெடிக்க தடை விதித்து அம்மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஹரியானாவில் வெளிநாடுகளில் இருந்து பட்டாசுகளை இறக்குமதி செய்ய தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தீபாவளிக்கு முன்னதாக பல மாநிலங்களில் பட்டாசு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர்நேற்று மக்களை 2 மணி நேரம் விற்கவும் பட்டாசுகளை வெடிக்கவும் அரசாங்கம் அனுமதிக்கும் என்று அறிவித்தார். இருப்பினும், தீபாவளியில் பட்டாசு விற்பனை மற்றும் வெடிக்கபடும் நேரத்தை அவர் குறிப்பிடவில்லை.
நேற்று செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் மனோகர் லால் கட்டர் கூறுகையில், “மாசுபடுதலுடன் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகின்றன. எனவே பட்டாசுகள் வெடிப்பது குறித்து கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டும். ஆனால், பட்டாசுகளை விற்க விரும்புவோருக்கு அவற்றை வெடிக்கவும் விரும்புகிறோம். இந்நிலையில், 2 மணி நேரத்தில் வர்த்தகர்கள் பட்டாசுகளை விற்க அனுமதியளிக்கப்படுகிறது என்று கூறினார்.