மேற்கு வங்கத்தில் பட்டாசு வெடிக்க, விற்க தடை..!
மேற்கு வங்கத்தில் தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்களில் பட்டாசு வெடிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கக் கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி சப்யசாசி பட்டாச்சார்யா மற்றும் நீதிபதி அனிருத்தா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸின் நெருக்கடியை சமாளிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் தீபாவளிக்கு பிறகு மாசு பிரச்னையை தவிர்க்கும் வகையில் பட்டாசு வெடிக்க கூடாது என மாநில அரசுக்கு கல்கத்தா உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வகையில் தீபாவளி, சத் பூஜை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளின் போது பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் தடை விதித்து கல்கத்தா உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
தடையை மீறி பட்டாசுகளை விற்பனை செய்பவர்கள் , பயன்படுத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது. தீபாவளி மற்றும் காளி பூஜையின் போது பசுமை பட்டாசுகளை வெடிக்க அனுமதித்த மேற்கு வங்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சமீபத்தில் அனுமதி வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது