பட்ஜெட் 2025 : வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்வு! விவரங்கள் இதோ…
வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி : 2025 – 2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வாசித்தார். வரி விதிப்பு, நகர்ப்புற மேம்பாடு, மின்சாரம், சுரங்கம், நிதி சீர்திருத்தம், ஒழுங்குமுறை ஆகிய 6 முக்கிய அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த பட்ஜெட்டில் மிக முக்கிய எதிர்பார்ப்பாக இருந்த வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்பட்ட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், தனி நபர் ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரையில் உள்ளவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
புதிய வருமான வரி விகிதம் :
- ரூ.4 லட்சம் வரையில் வருமானவரி இல்லை.
- ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை – 5% வரி.
- ரூ.8 லட்சம் முதல்ரூ.12 லட்சம் வரை – 10% வரி.
- ரூ.12 லட்சம் முதல் ரூ.16 ;லட்சம் வரை – 15% வரி.
- ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை – 20% வரி.
- ரூ.20 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை – 25% வரி.
- ரூ.24 லட்சத்திற்கு மேல் – 30% வரி.
இதில் ரூ.12 லட்சம் வரையில் வருமானம் ஈட்டும் தனி நபர்களுக்கு ரூ.75 ஆயிரம் வரையில் வரி கழிவு தொகை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரையில் வருமானம் பெறுவோர் வரி செலுத்த வேண்டியதில்லை என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி, மாதம் ரூ.1 லட்சம் வரையில் சம்பளம் பெரும் தொழிலாளர்கள் இனி வருமானவரி செலுத்த வேண்டியதில்லை என கூறப்பட்டுள்ளது.
புதிய வருமானவரி சட்டம் :
மேலும், வருமானவரி சட்ட மசோதாவானது அடுத்த வாரம் முழுதாக தாக்கல் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த வருமானவரி சட்ட மசோதாவானது நடுத்தர மக்களின் வரி சுமையை குறைக்கும் வகையில் இருக்கும் என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மேலும், ஏற்கனவே உள்ள வருமானவரி விதிகளில் 50% இதில் இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக வருமான வரி சட்டம் அமலுக்கு வந்து கிட்டத்தட்ட 60 ஆண்டுகளை கடந்துவிட்டது. அந்த வருமானவரி சட்டத்தின் கீழ் தான் வருமானவரி தாக்கல் செய்யப்பட்டு வரி செலுத்தப்பட்டு வருகிறது. இதில் தற்போதைய நிதிநிலை மாற்றம் கொண்டு புதிய மாற்றங்களை புகுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வருமானவரி சட்டம் தாக்கல் செய்யப்பட்டவுடன் பழைய விதிமுறைப்படி வருமானவரி தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், இனி புதிய முறையை பின்பற்றி வருமானவரி தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.