ராணுவத்தில் பெண் அதிகாரிகள் ஓய்வுக்காலம் வரை பணியாற்ற அனுமதி.!
இந்திய இராணுவத்தில் உள்ள பெண் அதிகாரிகளுக்கு அவர்களின் ஓய்வுக்காலம் வரை பணியாற்ற முறையான அனுமதி கடிதத்தை பாதுகாப்பு அமைச்சகம் இன்று வெளியிட்டது. இந்திய இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்த நடவடிக்கை இராணுவத்தில் அதிக பொறுப்பை ஏற்க பெண் அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கும்.
இந்திய ராணுவத்தில் உள்ள அனைத்துப் பத்து பிரிவுகளிலும் குறுகிய கால பணியில் உள்ள பெண் அதிகாரிகளுக்கு ஓய்வுக்காலம் வரை பணியாற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ராணுவ விமானப்பாதுகாப்பு (AAD), சிக்னல்கள், பொறியாளர்கள், ராணுவ விமானப்போக்குவரத்து, ராணுவ தளவாடப்படை (AOC) மற்றும் புலனறிவுப்படை ,மின்னணுவியல் மற்றும் இயந்திரப் பொறியாளர்கள் (EME), ராணுவச் சேவைப்படை (ASC), ஆகிய பிரிவுகளோடு தற்போது இருக்கும் நீதிபதி மற்றும் அட்வோகேட் ஜெனரல் (JAG) மற்றும் ராணுவக் கல்விப்படை ஆகிய பிரிவுகளில் இனி பெண் அதிகாரிகள் ஓய்வுக்காலம் வரை பணியாற்றலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம் இந்திய நாட்டுக்காக சேவை செய்வதில் பெண் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து வீரர்களுக்கும் சம வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்பதில் உறுதிப்பாட்டுடன் உள்ளதுஎன பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இப்போது வரை, பெண்கள் குறுகிய கால பணி (Short Service Commission ) மூலமாக மட்டுமே இந்திய ராணுவத்தில் நுழைய முடியும், மேலும் 14 ஆண்டுகளுக்கு மேல் சேவை செய்ய முடியாது. அவர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டாலும், அவர்களால் நிரந்தர பணியை பெற முடியவில்லை. இந்திய ராணுவத்தில் 3.89 சதவீதம் பெண்கள் மட்டுமே உள்ளனர். அதே நேரத்தில் கடற்படையில் 6.7 சதவீதமும், விமானப்படை 13.28 சதவீதமும் பெண்கள் உள்ளனர்.