பப்ஜிக்கு மாற்றாக கூகுள் பிளே ஸ்டோரில் வெளியானது FAUG கேம்!
பப்ஜிக்கு மாற்றாக பெங்களூருவை சேர்ந்த என்கோர் என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஃபாஜி (FAUG) கேம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சீன செயலிகள் மற்றும் பிரபல கேமான பப்ஜி (PUBG) இந்தியாவில் தடை செய்யப்பட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும் வரவேற்பை பெற்றிருந்த பப்ஜி தடை செய்யப்பட்ட நிலையில், இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட அதேபோன்ற விளையாட்டான ஃபாஜி (FAU-G) என்ற கேம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
பெங்களூருவை தலைமையக கொண்ட என்கோர் என்ற நிறுவனம் ஃபாஜி (FAU-G- Fearless and United Guards) கேமை வடிவமைத்துள்ளது. இந்த ஃபாஜி கேம் இந்திய இராணுவ வீரர்கள் எல்லையில் எதிர்கொள்ளும் சவால்களை பின்னணியாக கொண்டு வடிவகைப்பட்டுள்ளது என கூறப்பட்டது. இதை விளையாடுபவர்கள் நம்முடைய இராணுவ வீரர்களின் தியாகத்தை அறிந்துகொள்வார்கள் என்று நடிகர் அக்சய்குமார் தெரிவித்திருந்தார். இதனால் ஃபாஜி கேம் மீது எதிர்பார்ப்பு எகிறியது.
அறிவிக்கப்பட்டபடி கடந்த அக்டோபர் மாதம் ஃபாஜி வெளியிடப்படவில்லை. கடந்த நவம்பர் மாதம் முதல் இதற்கான முன்பதிவு ஆரம்பித்தது. இதனை 10 லட்சம் பேருக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில், குடியரசு தினத்தையொட்டி பப்ஜிக்கு மாற்றாக பெங்களூருவை சேர்ந்த என்கோர் என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஃபாஜி (FAUG) கேம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.