இரண்டரை வயது மகனை 40,000 -க்கு விற்று போதை மருந்து வாங்கிய தந்தை கைது…!
இரண்டரை வயது மகனை 40,000 க்கு விற்று போதை மருந்து வாங்கிய தந்தை மற்றும் குழந்தையை பெற்றுகொண்டவர் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அசாம் மாநிலத்திலுள்ள குவகாத்தி எனும் பகுதியிலுள்ள லஹரிகாட் எனும் கிராமத்தில் இரண்டு வயது குழந்தை ஒன்று தனது தந்தையால் நாற்பதாயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், சுஜிதா பேகம் என்பவருக்கு அமினுல் இஸ்லாம் எனும் ஒருவர் தனது குழந்தையை போதை மருந்து வாங்குவதற்காக 40,000 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக கூறியுள்ளனர்.
அமினுல் இஸ்லாம் என்பவரது மனைவி ருக்மினி பேகம் அவர்கள் தனது கணவர் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி எழுந்த சண்டையால் அவரது தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார். அதன் பின்பு ஒருநாள் அமினுல் தனது மனைவியின் தந்தை வீட்டுக்குச் சென்று, ஆதார் அட்டை வேண்டுமெனவும் மகனை சிறிது நேரம் கொடுக்குமாறும் கேட்டுள்ளார். முதலில் மறுத்த அவர், பின்பு குழந்தையை அமினுலிடம் கொடுத்துள்ளார். ஆனால் இரண்டு மூன்று தினங்களுக்கு பின்னும் குழந்தையை அமினுல் திருப்பித் கொடுக்கவில்லை.
மேலும் குழந்தை பணத்துக்காக விற்கப்பட்டதையும் அவர் கண்டறிந்துள்ளார். இதனை அடுத்து இவர் தனது கணவர் அமினுல் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சுஜிதா பேகத்தின் வீட்டிலிருந்த இரண்டரை வயது மகனை மீட்டு, குழந்தையின் தாயிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் அமினுல் இஸ்லாம் மற்றும் சுஜிதா பேகம் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இருவரும் கைது செய்யப்பட்டனர்.