தீர்வின்றி தொடரும் விவசாயிகள் போராட்டம் – தற்கொலைக்கு முயன்ற விவசாயி!

Default Image

கிட்டத்தட்ட ஒரு மாதமாக தொடரும் விவசாயிகள் போராட்டத்தினால் மனமுடைந்த பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த விவசாயி டெல்லி எல்லையில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில், ஹரியானா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த 27 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பல விவசாயிகள் கூட்டம் கூட்டமாக தங்களது மாநிலங்களிலிருந்து மிகக் கடினப்பட்டு இங்கு வந்து போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அதுபோல பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தர்ன்தர்ன் எனும் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். ஏற்கனவே இந்தப் போராட்டம் மூலமாக பல விவசாயிகள் தற்கொலை செய்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். விவசாயிகளுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆதரவு கிடைத்தாலும், அரசாங்கம் விவசாயிகளின் போராட்டம் குறித்து கண்டுகொள்ளாமல் இருப்பதால், போராடும் விவசாயிகளும் பலர் சோர்வடைந்த நிலையில் காணப்படுகின்றனர்.

பேச்சுவார்த்தைக்கு மத்தியஅரசு அழைப்பு விடுத்தாலும், சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பதை மட்டுமே விவசயிகள் கோரிக்கையாக வைத்துள்ளனர். இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து வந்திருந்த விவசாயி ஒருவர் இன்று விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக அதற்கான காரணத்தையும் கடிதம் ஒன்றில் எழுதி வைத்துள்ளார். காவல்துறையினர் இந்த கடிதத்தை கைப்பற்றி விசாரித்துள்ளனர். தீர்வின்றி தொடரக்கூடிய போராட்டத்தால் அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும், இதனால்தான் தற்கொலைக்கு முயன்று உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இவர் நன்றாக இருப்பதாகவும், ஹரியாணா மாநிலம் ரோத்தக்கில் உள்ள பிஜிஐஎம்எஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்