விவசாயிகள் போராட்டம்… பல நகரங்களில் இணைய சேவை துண்டிப்பு..!
விலைப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க கோரி டெல்லியில் நாளை மறுநாள் விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ளனர். இதற்காக அவர்கள் நாளை முதல் அரியானாவில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு செல்ல உள்ளனர். உத்தரப்பிரதேசம், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த 200 சங்கங்கள் விடுத்த அழைப்பை ஏற்று விவசாயிகள் டெல்லிக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
டெல்லிக்குள் விவசாயிகள் நுழைவதை தடுக்க ஹரியானா மாநில எல்லையில் உள்ள சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானாவுடனான டெல்லியின் எல்லைகளில் தடுப்புகளை அமைப்பதுடன் 5,000 க்கும் மேற்பட்ட போலீசார் நிறுத்தி வைக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.
சைதை துரைசாமி ரத்த மாதிரி அனுப்பி வைப்பு..!
மறுபுறம், அம்பாலா, குருசேத்ரா, கைதல், ஜிந்த், ஹிசார், பதேஹாபாத் மற்றும் சிர்சாவை ஒட்டியுள்ள ஏழு மாவட்டங்களில் இன்று காலை 6 மணி முதல் பிப்ரவரி 13 ஆம் தேதி இரவு 11.59 மணி வரை இணைய சேவையை நிறுத்த ஹரியானா அரசு முடிவு செய்துள்ளது. மேலும், மாவட்ட மற்றும் காவல்துறை எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக ஊடக தளங்கள் ஆகியவை மூலம் தவறான தகவல்களையும், வதந்திகளையும் பரப்புவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் இணைய சேவை துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் விவசாயிகள் கோரிக்கைகளை விவாதிக்க மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜுன் முண்டா மற்றும் நித்யானந்த் ராய் ஆகியோர் சண்டிகருக்கு வந்து ஐக்கிய கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சாவின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என கூறப்படுகிறது.
பஞ்சாப், ஹரியானா, உ.பி.ஆகிய மாநிலங்களில் விவசாய அமைப்புகளின் போராட்டத்தை கருத்தில் கொண்டு பல சாலைகளில் போலீசார் மாற்று வழியில் அனுப்பி வைக்கின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசலில் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். காய்கறிகளின் விலை உயரும் என்ற அச்சமும் அதிகரித்துள்ளது.