விவசாயிகள் போராட்டத்தால் ரயில்வே துறைக்கு ரூ. 2,400 கோடி இழப்பு..!
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திவரும் போராட்டங்களுக்கு மத்தியில், வடக்கு ரயில்வே பொது மேலாளர் அசுதோஷ் கங்கல் நேற்று கூறுகையில், தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தால் இந்திய ரயில்வேக்கு சுமார் ரூ.2,400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது, பியாஸ் மற்றும் அமிர்தசரஸ் இடையே ரயில்வேயின் ஒரு பகுதி தடுக்கப்பட்டுள்ளது. டார்ன் தரன் மாவட்டம் வழியாக செல்லும் மாற்று வழியை நாங்கள் பயன்படுத்துகிறோம். ஆனால், இது ஒரு நீண்ட தூரம் இருப்பதால் தேவையான அளவு ரயில்களை இயக்க முடியவில்லை.நாங்கள் இரண்டு ரயில்களை ரத்து செய்துள்ளோம். ஏழு ரயில்கள் டார்ன் தரன் நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளன.
விவசாயிகளின் போராட்டத்தால் நேரம் எடுப்பதால் சரக்கு ரயில்களும் பாதிக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். பஞ்சாபில் செப்டம்பர் 24 முதல் நவம்பர் 24 வரை இரண்டு மாதங்களுக்கு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன, அதன் பின் விவசாயிகள் டெல்லியில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். டெல்லியில் விவசாயிகள் 31-வது நாளாக தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.