விவசாயிகள் போராட்டம் – அமித் ஷா டெல்லியில் அவசர ஆலோசனை!
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தி உள்ளார். அனைத்து பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யும் சட்டம், பயிர் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், பயிர் கடனை தள்ளுபடி என 12 முக்கிய அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணி சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகள் பேரணி போராட்டத்தை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும், விவசாய அமைப்பினர் மற்றும் மத்திய தொழிற்சங்கங்கள் இன்று நாடு தழுவிய ‘பாரத் பந்த்’ போராட்டத்தை அறிவித்திருந்தது. இதனிடையே, விவசாயிகள் மற்றும் மத்திய அரசு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டாததால் போராட்டத்தை வலுப்படுத்த விவசாயிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
டெல்லி சலோ போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி ஒருவர் உயிரிழப்பு!
இந்த சூழலில், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தி உள்ளார் என கூறப்படுகிறது. உணவுத்துறை அமைச்சர் பியூஸ் கோயல், வேளாண் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா ஆகியோருடன் அமித்ஷா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று விவசாய சங்க பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், இன்று அமித்ஷா அவரச ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நாளை மறுநாள் மீண்டும் விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.