கருப்பு தினம் அனுசரிக்கும் விவசாயிகள் – டெல்லி எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு!
வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டம் தொடங்கி 6 மாதங்கள் இன்றுடன் முடிவடையும் நிலையில், இந்நாளை விவசாயிகள் கருப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளதால் டெல்லி எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் அமைப்பு இந்த சட்டங்களை வாபஸ் பெறக் கோரி கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி முதற்கொண்டு டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆறு மாதங்களாக நடைபெறக்கூடிய இந்த போராட்டத்தில், அவ்வப்போது வித்தியாசமான போராட்டங்கள் நடத்தப்பட்டு விவசாயிகள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த போராட்டம் துவங்கி இன்றுடன் ஆறு மாதங்கள் நிறைவுபெறும் நிலையில் இன்றைய தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளதுடன் நாடு முழுவதும் உள்ள விவசாய அமைப்புகளும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருக்க கூடிய விவசாயிகள் அனைவரும் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கருப்பு கொடியுடன் கருப்பு டர்பன் அணிந்து எல்லைகளில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.விவசாயிகளின் போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இந்த போராட்டத்தை முன்னிட்டு டெல்லி எல்லையான சிங்குவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.