விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் …! காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் கடன்களை ரத்து செய்து விவசாய விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை நிர்ணயித்து விவசாயிகளுக்கு ஓய்வூதியம் என பல்வேறு கோரிக்கைகளை வற்புறுத்தி டெல்லியில் அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் இன்று போராட்டம் தொடங்கியது.
இன்று காலை 10.30 மணியளவில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் இருந்து பேரணியாக விவசாயிகள் நாடாளுமன்றம் நோக்கி சென்றனர்.இந்தியா முழுவதிலும் இருந்து 207 விவசாய சங்கங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்டனர்.விவசாயிகள் பேரணியையொட்டி, 3,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில் விவசாயிகள் கோரிக்கை பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில்,விவசாயிகளுக்கு அளித்த குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு, ஊக்கத்தொகை போன்ற வாக்குறுதிகளை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றவில்லை.பிரதமரின் வாக்குறுதிகள் பேச்சளவில் மட்டுமே இருக்கிறது. தொழிற்சாலைகளுக்கான கடன்கள் தள்ளுபடி போல் விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.