விவசாயிகள் போராட்டம்! மத்திய அரசின் 5 ஆண்டு சலுகை திட்டத்தை நிராகரித்த விவசாய சங்கம்
விவசாய சங்கத்தினருடன் நடைபெற்ற நான்காம் கட்ட பேச்சுவார்த்தையின் போது மூன்று வகையான பருப்பு வகைகள், மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் (MSP) வாங்கும் 5 ஆண்டுக்கான மத்திய அரசின் ஒப்பந்த சலுகை முன்மொழிவை சம்யுக்த கிசான் மோர்ச்சா (SKM) விவசாய சங்கம் நிராகரித்துள்ளது. அதன்படி, விவசாயிகள் போராட்டத்தை வழிநடத்துபவர்களுடன் நேரடியாக தொடர்பில்லாத விவசாய சங்கங்களின் குடை அமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா நிராகரிப்பு முடிவை அறிவித்துள்ளது.
மேலும்,சம்யுக்த கிசான் மோர்ச்சா விடுத்துள்ள அறிக்கையில், “மத்திய அரசின் இந்த முன்மொழிவு விவசாயிகளின் கோரிக்கைகளை திசை திருப்புவதாக உள்ளது, பாஜகவின் 2014ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி அனைத்து வகையான பயிர் வகைகளையும் கொள்முதல் செய்ய வேண்டும். இந்த கொள்முதல் C2 மற்றும் 50 சதவீத குறைந்தபட்ச ஆதரவு விலையில் சுவாமிநாதன் கமிஷன் அறிக்கை அடிப்படையில் இருக்க வேண்டும்.
விவசாய துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா உட்பட மூன்று மத்திய அமைச்சர்களின் தலைமையில் இதுவரை நடந்த நான்கு கட்டப் பேச்சுவார்த்தையில் வெளிப்படைத்தன்மை இல்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடன் தள்ளுபடி, மின்கட்டணத்தை உயர்த்தக் கூடாது, 2020/21 போராட்டத்தின் போது விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெறுதல் உள்ளிட்ட பிற கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.