மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்…குடியரசு தலைவரை சந்திக்கும் விவசாயிகள் சங்கத்தினர்.!

இந்திய மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார் தொடர்பாக, குடியரசு தலைவரை சந்தித்து பாதிக்கப்பட்ட மல்யுத்த வீரர்களுக்கு நீதி கேட்க இருப்பதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
ஏற்கனவே, மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகார் அளித்து அவரை கைது செய்ய வேண்டும் என பல நாட்களாக போராடி வருகின்றனர் மல்யுத்த வீராங்கனைகள். அந்த வகையில், புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முற்பட்டு பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
அடுத்ததாக தங்கள் வாங்கிய பதக்கங்களை கங்கை ஆற்றில் விட போவதாக அறிவித்து பின்னர் விவசாயிகள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அதனை கைவிட்டனர். இப்படி பல்வேறு வகையில் தங்களது போராட்டங்களை மல்யுத்த வீராங்கனைகள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், உத்தரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் டெல்லியைச் சேர்ந்த கிஷான் யூனியன் சார்பில், முசாபர்நகரின் சோரம் கிராமத்தில் பெண் மல்யுத்த வீரர்கள் தலைமையில் உயர்மட்ட கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், நடைபெற்று வரும் போராட்டம் குறித்து விவாதித்தனர். மேலும், இன்று குடியரசு தலைவரை சந்தித்து பாதிக்கப்பட்ட மல்யுத்த வீரர்களுக்கு நீதி கேட்க இருப்பதாகவும், குருக்ஷேத்திரத்தில் கூடுதல் முடிவுகள் எடுக்கப்படும், என்று முன்னணி விவசாய தலைவர்களில் ஒருவரான ராகேஷ் டிகாயிட் அறிவித்தார்.