விவசாயிகள் சங்கம் அறிவிப்பு: வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி செப்டம்பர் 27 -ல் பாரத் பந்த்…!
புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக வாபஸ் பெற வலியுறுத்தி, வருகிற செப்டம்பர் 27-ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரியும் டெல்லி எல்லைப் பகுதியில் கடந்த 9 மாதங்களாக விவசாயிகள் பலர் முகாமிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த விவசாயிகளுடன் பத்து சுற்று பேச்சுவார்த்தைகளை மத்திய அரசு மேற்கொண்டாலும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் 40 விவசாய சங்கங்கள் அடங்கிய சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற அமைப்பின் சார்பில் கிசான் மகா பஞ்சாயத்து எனும் விவசாயிகள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், நேற்று உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் உள்ள அரசு கல்லூரி மைதானத்தில் இந்த மாநாடு நடைபெற்றது. இதில் உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, கர்நாடகா உள்ளிட்ட 15 மாநிலங்களிலிருந்து 300க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகளை சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பாரதீய கிசான் சங்கம் செய்தி தொடர்பாளர் ராகேஷ் திகாயத் பேசுகையில் நாடு விற்பனை செய்யப்படுவதை நாம் தடுக்க வேண்டும். இந்த மாநாட்டின் நோக்கமே நமது விவசாயமும், நாடும் காக்கப்பட வேண்டும் என்பது தான் எனவும், மேலும், இது போன்ற மாநாடுகள் நாடு முழுவதும் நடத்தப்படும் எனவும் அவர் பேசியுள்ளார்.
மேலும், மத்திய அரசையும், உத்தரபிரதேச மாநில அரசையும் கடுமையாக விமர்சித்து பேசிய அவர், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி, வருகிற 27-ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் எனவும் விவசாய சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.