புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் இன்று விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்!
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த மூன்று மாதங்களாக போராடி வரும் விவசாயிகள் இன்று நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை வலுப்படுத்துவதற்க்காக சாலை மறியல், போட்டோ போராட்டம், உண்ணாவிரதம் மற்றும் டிராக்டர் போராட்டம் போன்ற புதிய போராட்டங்களையும் அவ்வப்போது நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள நிலையில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், இன்று போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக நாடு முழுவதிலும் ரயில் மறியல் போராட்டத்தை விவசாயிகள் கையில் எடுத்துள்ளனர்.
அதன்படி வியாழக்கிழமையான இன்று பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் ரயில் மறியல் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விவசாயிகள் ஒரு புறம் தீவிரமாக மேற்கொண்டு வந்தாலும், ரயில்வே அதிகாரிகள் நாடு முழுவதும் ரயில் போக்குவரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ரயில் மறியல் போராட்டத்தை தடுத்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.