30 கோடி செலவில் ஹெலிகாப்டர் வாங்கிய விவசாயி – வியக்க வைத்த விவசாயியின் பதில்!
30 கோடி ரூபாய் செலவில் மகாராஷ்டிராவை சேர்ந்த விவசாயி ஒருவர் ஹெலிகாப்டர் வாங்கியுள்ள நிலையில், இது தனது பால் வியாபாரம் மற்றும் வணிக பயன்பாட்டுக்காக என விவசாயி கூறியுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பிவாண்டி எனும் நகரத்தை சேர்ந்த ஜனார்த்தன் போயிர் என்பவர் ஒரு விவசாயி மட்டுமல்லாமல், அவர் வணிக தொழில் செய்து வருபவராகவும் இருக்கிறார். விவசாயிகள் பலர் எளிமையான வாழ்க்கைய வாழ்ந்து வந்தாலும் ஜனார்த்தன் தான் உழைத்து முன்னேறிய பணத்தை வைத்து தற்பொழுது 30 கோடி ரூபாய் செலவில் ஒரு ஹெலிகாப்டரை வாங்கியுள்ளார். இவர் விவசாயம் மட்டுமல்லாமல் பால் வியாபாரம், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழிலும் செய்து வருகிறார். பிவாண்டி பகுதியில் உள்ள தொழில் முனைவோர்களில் முக்கியமான ஒருவராக கருதப்படக்கூடிய ஜனார்தன் அடிக்கடி ராஜஸ்தான், பஞ்சாப் குஜராத், ஹரியானா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு பயணம் செய்து வருபவராம்.
எனவே, தனது பயணத்திற்கும் பால் வியாபாரத்திற்கும் உதவியாக இருக்கும் என்பதற்காக தனது வீட்டிற்கு அருகே இருந்த சுமார் இரண்டரை ஏக்கர் நிலத்தில் ஹெலிகாப்டர் நிறுத்துவதற்கான இடம், பைலட் அறை மற்றும் தொழில்நுட்ப அறை ஆகியவற்றை அமைத்து தற்பொழுது 30 கோடி செலவில் ஒரு ஹெலிகாப்டர் ஒன்றையும் வாங்கி விட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனது மனித பயன்பாட்டிற்காக நான் வெளிமாநிலங்களுக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் இந்த ஹெலிகாப்டர் வாங்கியிருக்கிறேன் எனவும், எனது வணிக வியாபாரத்தை போலவே எனது பால் வியாபாரத்தையும் கவனித்துக் கொள்வதற்கு இது மிகவும் உதவியாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். விவசாயி ஒருவர் இவ்வளவு செலவில் ஹெலிகாப்டர் வாங்கியுள்ளது பலரது பாராட்டைப் பெற்றுள்ளதுடன், பால் வியாபாரத்திற்கும் தனது ஹெலிகாப்டரை பயன்படுத்தப்போவதாக அவர் கூறியுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.