மக்களவை தேர்தல் : பாஜக சார்பில் நடிகை கங்கனா ரனாவத் போட்டி!
Kangana Ranaut : நாடாளுமன்ற தேர்தலில் பிரபல நடிகை கங்கனா ரனாவத் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி வரையில் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில், பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
அதைப்போல, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கொண்ட பட்டியலையையும் கட்சிகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில், ஏற்கனவே, பாஜக 4 கட்டம் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து இருந்த நிலையில், நேற்று பாஜக தலைமை5 வது கட்டமாக 111 பாஜக வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டது.
அந்த பட்டியலில் தான் பிரபல நடிகையான கங்கனா ரனாவத் பெயர் இடம்பெற்று உள்ளது. அதன்படி, இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் கங்கனா ரனாவத் பாஜக சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல, கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக மாநில தலைவர் கே.சுரேந்திரன் என்பவர் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இமாச்சலப் பிரதேசத்தில் 7-ஆம் கட்டமாக ஜூன் 1-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.