அமித்ஷா பற்றிய போலி வீடியோ சர்ச்சை.! தெலுங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு சம்மன்.!
Amit Shah Fake video : அமித்ஷா பற்றிய போலி வீடியோ வெளியிட்டது தொடர்பான புகாரில் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வழக்கமாக வழங்கப்பட்டு வரும் SC/ST , ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை போல தெலுங்கானா மாநிலத்தில், இஸ்லாமியர்களுக்கும் இடஓதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அவர்களை பிற்படுத்தப்பட்டோராக கருதி 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக தெலுங்கானா பிரச்சார கூட்டத்தில் சில தினங்களுக்கு முன்னர் பேசிய மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா, தெலுங்கானாவில், இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு, இந்திய சட்டத்தை மீறி செயல்படுத்தப்பட்டு வருகிறது என தனது விமர்சனத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்தார்.
அவர் கூறியதை சிலர் சமூக வலைத்தளங்களில், அமித்ஷா, ‘பாஜக ஆட்சிக்கு வந்ததும் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய உள்ளது’ என கூறியதாக பதிவிட்டு இருந்தனர். இதனை காங்கிரஸ் கட்சியினரும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தனர். இதனால் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் பாஜகவினர் டெல்லி போலீசாரிடம் இந்த போலி வீடியோ குறித்து புகார் அளித்து இருந்தனர்.
இந்த புகாரை அடுத்து நடவடிக்கை எடுத்துள்ள டெல்லி போலீசார், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி வரும் மே மாதம் 1ஆம் தேதி டெல்லி போலீசாரிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், அப்போது ரேவந்த் ரெட்டி பயன்படுத்தும் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டு வரவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் உள்ள 17 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆளும் காங்கிரஸ் , எதிர்க்கட்சியான பாரதிய ராஸ்டிரிய சமிதி கட்சி , பாஜக என மும்முனை போட்டி நிலவுகிறது.