டெலிகிராமில் 5000 ரூபாய்க்கு விற்கப்படும் போலி கொரோனா தடுப்பூசி சான்றிதழ்கள்….!
டெலிகிராமில் இந்தியாவுக்கான போலி கொரோனா தடுப்பூசி சான்றிதழ்கள் 5000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸுக்கு எதிராக பல்வேறு நாடுகளிலும் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு செலுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில், கொரோனா பரவலை தவிர்க்கும் விதமாக வெளி நாடுகளில் இருந்து வரக்கூடிய மக்களுக்கு, கொரோனா தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனும் கட்டுப்பாடுகள் பல நாடுகளில் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெளி நாடுகளுக்கு கட்டாயமாக செல்ல வேண்டும் என விரும்புபவர்கள் பலர் தடுப்பூசியை செலுத்தி கொள்கின்றனர். ஆனால்,சிலர் தடுப்பூசி செலுத்தி கொள்ள அச்சத்தில் போலியாக கொரோனா தடுப்பூசி சான்றிதழை பணத்திற்கு வாங்கி காண்பித்து செல்கின்றனர். தற்பொழுதும், இந்தியா உட்பட 29 நாடுகளின் போலியான கொரானா தடுப்பூசி சான்றிதழ் மற்றும் போலியான கொரோனா சோதனை முடிவுகள் டெலிகிராமில் விற்பனை செய்யப்படுவதாக செக் பாயிண்ட் ரிசர்ச் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் போலி தடுப்பூசி சான்றிதழ் ஒவ்வொன்றும் 5,520 ரூபாயில் கிடைப்பதாகவும், தடுப்பூசி எடுக்க விரும்பாத நபர்கள் பலர் இவ்வாறு போலியான கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களை வாங்குகிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த மார்ச் முதல் 5,000-க்கும் மேற்பட்ட போலியான டெலிகிராம் குழுக்கள் இது போன்ற போலி தடுப்பூசி சான்றிதழ்களை விற்பனை செய்தது கண்டறியப்பட்டுள்ளதாகவும், டெலிகிராமில் தான் இந்த போலி சான்றிதழ் விற்பனை அதிகளவில் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.