வன்முறையை தூண்டும் கருத்துக்களுக்கு பேஸ்புக் அனுமதிப்பதில்லை.. ராகுல்காந்தி குற்றச்சாட்டுக்கு பேஸ்புக் நிறுவனம் மறுப்பு!
வன்முறையை தூண்டும் நோக்கில் கருத்துக்கள் பதிவேற்றினாலோ, அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ராகுல் காந்தியின் குற்றச்சாற்றுக்கு பேஸ்புக் நிறுவனம் பதிலளித்துள்ளது.
பாஜக அரசு, இந்தியாவில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமுக வலைத்தளங்களை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி நேற்று குற்றம்சாட்டி, தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர், பாஜக கட்சியும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் பிரபல சமூக வலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பை கட்டுப்படுத்தி வருகின்றதாகவும், அதன் மூலம் போலி செய்திகளையும், வெறுப்புகளையும் வாக்காளர்களிடையே பரப்பி வருகின்றதாக தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, இதுதொடர்பான உண்மையை அமெரிக்க ஊடகங்கள் செய்தி வாயிலாக வெளிப்படுத்தியுள்ளது எனவும் குற்றசம் சாட்டினார். ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாற்றுக்கு பேஸ்புக் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், வெறுப்புப் பேச்சுகள் யாரிடம் இருந்து வந்தாலும், அதனை பேஸ்புக் ஏற்பதில்லை என விளக்கமளித்துள்ளது.
பாஜக உறுப்பினர்களுக்கும், பேஸ்புக் நிறுவனத்துக்கும், எந்தொரு தொடர்பும் இல்லையெனவும், உலகளவில் சர்ச்சைக்குரிய வெறுப்புப் பேச்சுகள் பதிவேற்றம் செய்யப்பட்டாலோ, வன்முறையை தூண்டும் நோக்கில் கருத்துக்கள் பதிவேற்றினாலோ, அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பேஸ்புக் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.