டெல்லியில் அக்டோபர் 1 முதல் முகக்கவசம் அபராதம் நீக்கம்!
டெல்லியில் அக்.1 முதல் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிப்பதை நிறுத்த முடிவு.
டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம்(டிடிஎம்ஏ), அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் படிப்படியாகக் குறைந்து வருவதால், அக்டோபர் 1-ஆம் தேதி முதல் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிப்பதை நிறுத்த முடிவு செய்துள்ளது. ஆனால், மக்கள் பொது இடங்களில் தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அதிகாரப்பூர்வ அபராதம் ரத்து என்ற உத்தரவு வந்தவுடன் இது நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது.
டெல்லியில் கொரோனா பாதிப்புகள் வெகுவாகக் குறைந்துள்ளன, மேலும் நிலைமை முன்பை விட தற்போது சீராக உள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, முகக்கவசம் அபராதம் அகற்ற முடிவு செய்யப்பட்டது. இருப்பினும், மக்கள் விதிகளைப் பின்பற்றத் தேவையில்லை என்று அர்த்தமல்ல, அவர்கள் தொடர்ந்து முகக்கவசத்தை அணிய வேண்டும். லெப்டினன்ட் கவர்னர் வினய் குமார் சக்சேனா, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்ட கொரோனா ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
முன்னதாக, மார்ச் 31 அன்று, ஆணையம் முகக்கவச அபராதத்தை அகற்றியது, மூன்று வாரங்களுக்குப் பிறகு அதை மீட்டெடுக்க, தலைநகரில் மீண்டும் தொற்றுநோய்கள் அதிகரித்தன. இதனால் மீண்டும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது அதை நீக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.