அத்தியாவசியமற்ற பொருட்களை ஆன்லைனில் விற்கக்கூடாது – மத்திய அரசு
நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதால் ஆன்லைன் நிறுவனங்களுக்கு ஏற்கனவே இருந்த தடை தொடரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோன தாக்கம் அதிகரித்து வருவதால் ஊரடங்கை நீடிப்பதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். ஏப்ரல் 20 க்கு பிறகு நிபந்தனைகளுடன் ஊரடங்கில் சில தளர்வுகள் இருக்கும் என்று அறிவித்தார். அதற்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. அதில் அத்தியாவசிய சேவைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்களில் அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பதற்கான ஏற்கனவே இருந்த தடை தொடரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் வணிக நிறுவனங்களில் மின்னணு சாதனங்கள் மற்றும் ஆடைகள் உள்ளிட்டவை விற்க அனுமதி என தகவல் வெளியான நிலையில், தற்போது ஆன்லைனில் அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பதற்கான தடை தொடரும் என மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.