ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க 5 பேர் கொண்ட நிபுணர் குழு..!
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க 5 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அப்போது, மத்திய அரசு வழக்கறிஞர் ஆக்சிஜன் உற்பத்திக்காக அனுமதிக்கலாம் என கூறியிருந்தார். இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதைதொடர்ந்து, ஆக்ஸிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் யோசனை வழங்கியது.
இதனைதொடர்ந்து, முதல்வர் பழனிசாமி தலைமையில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தற்காலிக 4 மாதங்களுக்கு மட்டும் தமிழக அரசு அனுமதி வழங்கியது.
அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுத்து 5 தீர்மானங்கள் குறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பத்திர தாக்கல் செய்துள்ளது. இதைத்தொடர்ந்து, ஆக்சிஜன் தயாரிக்க ஆலையை திறக்க வேந்தாந்தா நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க 5 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. 5 பேர் என்பதை தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையம் முடிவு செய்யும். நிபுணர் குழுவோடு சேர்த்து மேற்பார்வைக் குழு ஒன்றை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு வேதாந்தா நிறுவனத்தின் வேறு எந்த ஒரு ஆதாயத்திற்காகவும் கிடையாது எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் விளக்கம் அளித்தனர்.