வரலாற்றில் இன்று கார்கில் போர் வெற்றி தினம்…!
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26 ஆம் தேதியானது “கார்கில் போர் வெற்றி தினமாக” கொண்டாடப்படுகிறது.
கடந்த 1999 ஆம் ஆண்டு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை இந்தியாவுக்கும்,பாகிஸ்தானுக்கும் இடையில்,கார்கில் போர் நடைபெற்றது. இந்த போர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் நகரின் அருகில் நடந்தது.
போருக்கான காரணம்:
மே 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான் இராணுவமும்,காஷ்மீரி போராளிகளும் பாகிஸ்தானிலிருந்து எல்லைக் கட்டுப்பாடுக் கோட்டைத்தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்ததே கார்கில் போருக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
போர் உறுதி:
அவ்வாறு,நடைபெற்ற போரின் ஆரம்ப கட்டத்தில் பழியை முற்றிலுமாக காஷ்மீரி போராளிகள் மீது பாகிஸ்தான் சுமத்தியது.ஆனால், உயிரிழந்த வீரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலமாகவும், போருக்குப்பின் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், மற்றும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆகியோர் விடுத்த அறிக்கைகள் மூலமாகவும், பாகிஸ்தான் துணை இராணுவப் படையினர், தளபதி அஷ்ரஃப் ரஷீத் தலைமையில் போர் நடைபெற்றது உறுதியானது.
இந்தியப் பகுதிகளை மீட்டல்:
இதன்பின்னர்,இந்திய வான்படையின் துணையோடு, இந்தியத் தரைப்படை, பாகிஸ்தான் இராணுவம் மற்றும் போரளிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்தியப் பகுதிகளை மீட்டது.மேலும்,சர்வதேச நாடுகள் பாகிஸ்தானின் செயலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், பாகிஸ்தான் படைகள் இந்தியாவுடனான போரைக் கைவிட்டன.எனினும்,இந்த போரில் பாகிஸ்தான் அளித்த தகவலின் படி,அந்நாட்டு ராணுவ வீரர்கள் 357-4000 போரில் உயிரிழந்தனர்.665 க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.அதேபோல,இந்திய ராணுவ வீரர்கள் 527 பேர் உயிரிழந்தனர்.1,363 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதனையடுத்து,அப்போதைய இந்திய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், கார்கில் போர் வெற்றி அடைந்ததாக அறிவித்தார். இறுதியில், ஜூலை 26 ஆம் தேதியன்று கார்கில் பிரச்சனை அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது. பாகிஸ்தானிலிருந்து ஊடுருவியவர்கள் கார்கில் பகுதியில் இருந்து முற்றிலும் அகற்றப்பட்டதாக இந்திய இராணுவம் அறிவித்தது.
வெற்றி தினம்:
இதனால்,ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26 ஆம் தேதியானது “கார்கில் போர் வெற்றி தினமாக” கொண்டாடப்படுகிறது. அதன்படி,இன்றும் அனுசரிக்கப்படுகிறது.