பேருந்துகளில் உங்கள் கொடியை கூட பயன்படுத்திக் கொள்ளுங்கள் – பிரியங்கா காந்தி
காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்துகளுக்கு உத்தரபிரதேச முதல்வர் அனுமதி வழங்கவில்லை என பிரியங்கா காந்தி குற்றசாட்டு.
இந்தியா முழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு வாகனங்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதனால் நடைபயணமாக சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். பின்னர் செல்லும் வழியில் உயிரிழப்பும் நிகழ்ந்துள்ளது. இதற்காக மத்திய, மாநில அரசுகள் சார்பில் சிறப்பு ரயில் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்துகளுக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அனுமதி வழங்கவில்லை என காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றசாட்டு உள்ளார்.
இதுகுறித்து காணொலிக்காட்சி மூலம் செய்தியலாளர்களிடம் பேசிய அவர், நாங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்துகளுக்கு உ.பி. அரசு அனுமதி வழங்கி இருந்தால், இந்நேரம் அங்குள்ள 72,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று இருப்பார்கள் என கூறியுள்ளார். மேலும், பேருந்துகளில் பாஜக கொடியை கூட பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் சாலையில் செல்பவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அல்ல, அவர்கள் இந்தியாவின் முதுகெலும்பு என்று தெரிவித்துள்ளார். அனுமதி கிடைக்காமல் தற்போது அந்த பேருந்துகள் ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேச எல்லைகளில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.