சபாநாயகர் பேச அனுமதி அளித்தாலும் ஆளுங்கட்சி எம்பிக்கள் பேச விடுவதில்லை – திமுக எம்பி திருச்சி சிவா
நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 20-ஆம் தேதி தொடங்கிய நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக தொடர் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டு வந்த நிலையில், 8 நாட்களாக நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் திமுக எம்பி திருச்சி சிவா அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியதற்கு, ஆளும் கட்சிதான் காரணம். சபாநாயகர் பேச அனுமதி அளித்தாலும் ஆளுங்கட்சி எம்பிக்கள் பேச விடுவதில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசிய போது மைக்கை அணைத்து இடையூறு செய்தனர். எதிர்கட்சி தலைவர் பேச எழுந்தாலே அவரை பேச விடாமல் அமளியில் ஈடுபடுகின்றனர். நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு பிரதமரோ, ஆளும் அரசோ மரியாதை தருவதில்லை.
பிரதமர் அவைக்கு வந்து பதில் தர வேண்டுமென கேட்பது நியாயமான கோரிக்கை. மணிப்பூர் வன்முறை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என பிடிவாதம் பிடிக்கவில்லை; உறுதியாக இருக்கிறோம். மணிப்பூர் குறித்த விவாதத்துக்கு பிரதமர் வந்து பதிலளிக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாக உள்ளது என தெரிவித்துள்ளார்.