கர்நாடக மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் யார்.? 3 மாதங்கள் கடந்தும் இன்னும் திணறும் பாஜக.!

Karnataka BJP

கர்நாடக சட்டமன்ற தேர்தல் கடந்த மே மாதம் 10ஆம் தேதி நடைபெற்று, மே 13ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் என மும்முனை போட்டியாக பிரதான கட்சிகள் தனித்தனியாக களமிறங்கின.

மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. சித்தராமையா கர்நாடக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த முறை ஆட்சியை கைப்பற்றி இருந்த பாஜக 66 இடங்களை வென்று தோல்வி அடைந்து இருந்தது. மதசார்பற்ற ஜனதா தளம் 19 தொகுதிகளை வென்றுள்ளது.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் இரண்டாவதாக அதிக எம்எல்ஏக்களை கொண்டுள்ள பாஜக எதிர்க்கட்சியாக விளங்குகிறது. ஆனால் தற்போது வரை சட்டமன்றத்தில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் யார் என அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் இருந்து வருகிறது. இரண்டாவது பெரிய கட்சியாக உள்ள பாஜக சட்டமன்ற குழு தலைவர் தான் எதிர்க்கட்சி தலைவராக செயல்படுவார்.

ஆனால், சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் தனி தனி பிரிவாக பாஜக தலைவர்கள் செயல்படுவதால் எதிர்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதில் பாஜக தேசிய தலைமை காலதாமதம் ஏற்படுத்துகிறது. முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என ஒரு பிரிவினரும், பசனகவுடா ஆர் பாட்டீல் எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என ஒரு பிரிவினரும்  கூறி வருகின்றனர்.

எப்படியும் லிங்காயத் சமூகத்தை சேர்ந்த ஒருவர் தான் எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என பாஜக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேற்கண்ட இரு பாஜக தலைவர்களும் லிங்காயத் சமூத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

அதே போல, அடுத்து ஒக்கலிகா சமூகத்தை சேர்ந்த ஒருவரை பாஜக மாநில தலைவராக தேர்ந்தெடுக்கவும் பாஜக தலைமை முடிவு எடுத்துள்ளது. ஏனென்றால் , எதிர்க்கட்சி தலைவராக லிங்காயத் சமூத்தினரும், கட்சி தலைவராக ஒக்கலிகா சமூகத்தை சேர்ந்தவரும் இருந்தால் இரு பிரிவினருக்கும் சம வாய்ப்பு கொடுத்தார் போல ஆகிவிடும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

அதே போல பாஜக மாநில தலைவராக யாரை தேர்ந்தெடுப்பது என்பதிலும் இன்னும் தெளிவான முடிவு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் மத்திய அமைச்சராக உள்ள ஷோபா கரந்த்லாஜே மற்றும் பாஜக எம்எல்ஏ சி.என்.அஸ்வத் நாராயண் ஆகியோரிடையே போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. இதனால் கர்நாடக மாநில பாஜக தலைவர் யார் என்பதிலும் சிக்கல் நீடித்து வருவதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்