ஷாக் கொடுத்த ஐரோப்பிய ஒன்றியம்… இந்திய பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள்!
Indian Items: 527 இந்தியப் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இந்திய தயாரிப்பு பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதாவது, இந்தியாவில் தயாரிக்கப்பட்டு பேக் செய்யப்பட்ட சில மசாலா பொருட்களில் எத்திலீன் ஆக்சைடு என்ற புற்றுநோயை உண்டாக்கும் கெமிக்கல் இருப்பது கண்டறியப்பட்டதால், அந்த பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட 527 பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் எத்திலீன் ஆக்சைடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 2020 முதல் ஏப்ரல் 2024 வரையிலான காலகட்டத்தில் ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் சோதனை நடத்தியுள்ளது. அதில் இந்திய உணவுப் பொருட்களில் எத்திலீன் ஆக்சைடு என்ற கெமிக்கல் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி 313 முந்திரி மற்றும் எள் போன்ற பொருட்கள், 60 மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள், டயட்டிக் உணவுகள் 48 மற்றும் பிற உணவுப் பொருட்கள் 34 ஆகியவற்றில் அந்த கெமிக்கல் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது. இதில் 332 பொருட்களில் இந்தியா என குறிப்பிடப்பட்டுள்ளது.
மீதமுள்ள பொருட்கள் பிற நாடுகள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன்பின் புற்றுநோயை உண்டாக்கும் எத்திலீன் ஆக்சைடு என்ற கெமிக்கல் உள்ள உணவுப் பொருட்கள் அடங்கிய 87 சரக்கு கண்டைனர்கள் துறைமுக எல்லையிலே தடுத்து நிறுத்தப்பட்டன என்றும் மீதமுள்ளவை சந்தைகளில் இருந்து அகற்றப்பட்டன எனவும் ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்திய பொருட்களில் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல் இருப்பது கண்டறியப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எத்திலீன் ஆக்சைடு என்பது ஒரு பூச்சிக்கொல்லி ரசாயனமாகும். இது பெரும்பாலும் மருத்துவ உபகரணங்களில் இருக்கும் கிருமிகளை நீக்க பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
இவற்றை மசாலா உள்ளிட்ட உணவு பொருட்கள் சீக்கிரம் கெட்டுப்போகாமல் இருக்க பயன்படுத்தப்படலாம் எனவும் எனவும் கூறப்படுகிறது. உணவுப் பொருட்களில் இதன் அளவு அதிகமானால், பல்வேறு வகையான புற்றுநோய் உள்ளிட்ட பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்கின்றனர்.
அதன்படி, எத்திலீன் ஆக்சைட் கொண்ட உணவு பொருட்களைத் தொடர்ந்து சாப்பிட்டால் நுரையீரல் பாதிப்பு, கோமா, சுவாச கோளாறு, மூச்சு திணறல், வயிற்றுப்போக்கு, தூக்கம், கண் எரிச்சல், தலைவலி உள்ளிட்ட பக்க விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.