எஸ்ஸார் குழுமத்தின் இணை நிறுவனர் ஷஷி ரூயா காலமானார்!!
தனது சகோதரர் ரவியுடன் இணைந்து எஸ்ஸார் நிறுவனத்தை நிறுவிய ஷஷி ரூயா 80 வயதில் காலமானார்.
மும்பை : எஸ்ஸார் குழுமத்தின் இணை நிறுவனரான ஷஷி ரூயா, நேற்று திங்கள்கிழமை (நவ.-25) தனது 80 வயதில் காலமானார். அவரது உடல் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 1 மணி முதல் 3 மணி வரை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
இவர், 1965-ம் ஆண்டு தனது தந்தை நந்த் கிஷோர் ரூயாவின் வழிகாட்டுதலின் கீழ் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கி பின் தனது சகோதரர் ரவியுடன் இணைந்து இந்த எஸ்ஸார் நிறுவனத்தை தொடங்கினார். எஸ்ஸார் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் அந்த நிறுவனத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.
ஷாஷி ரூயா, பல தேசிய அமைப்புகள் மற்றும் தொழில் சங்கங்களில் தீவிரமாக ஈடுபட்டவர் ஆவார். மேலும், இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI) நிர்வாகக் குழுவிலும் பணியாற்றியுள்ளார். அதன் பின், இந்திய-அமெரிக்க கூட்டு வணிக கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றினார்.
எஸ்ஸார் நிறுவனத்தை தொடங்கிய ஆரம்ப நாட்களில் மிகவும் கடினமாக உழைத்த இவர் நேற்று வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது உடல் இன்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதன்பின் மாலை 4 மணி அளவில் அவரது இறுதி ஊர்வலம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.