எஸ்எஸ்எல்வி-டி3 EOS-08 வெற்றி.! அடுத்த இலக்கு ககன்யான் தான்… டிசம்பரை குறிவைத்த இஸ்ரோ.!

ஸ்ரீஹரிகோட்டா : பேரிடர் காலங்களில் உதவும்படியாக புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை (EOS-08) எஸ்எஸ்எல்வி டி3 ராக்கெட் உதவியுடன் இன்று காலை விண்ணில் ஏவப்பட்டது. அடுத்த ககன்யான் திட்டம் தான் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
இன்று காலை 9.17 மணியளவில் ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து எஸ்எஸ்எல்வி-டி3 ரக ராக்கெட் மூலம் EOS-08 (Earth Observation Satellite-8) எனும் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. இதற்கான கவுன்டவுன் இன்று அதிகாலை 3 மணிக்குத் தொடங்கியது. தற்போது செயற்கைக்கோளானது வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
சுமார், 196 கிலோ எடை கொண்ட EOS-08 செயற்கைக்கோளானது, புவி வானிலை, பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. பூமியின் தரை தளத்திலிருந்து 475 கி.மீ தொலைவில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
EOS-08 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது குறித்து இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” EOS-08 விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது வெற்றிகரமான செயலாகும். தற்போதைய நிலவரப்படி, செயற்கைக்கோள் சரியான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு, அனைத்து பாகங்களும் விண்ணில் சரியாகப் பிரிந்து அதன் செயல்முறைகளைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் இந்த திட்டம் கிட்டத்தட்ட 100 சதவீதம் வெற்றியடைந்துள்ளது. மேலும் SSLV D2வை தொடர்ந்து SSLV D3யின் வளர்ச்சித் திட்டத்தை வெற்றிகரமான பயணத்துடன் முடித்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இப்போது, இதனைத் தாண்டி, SSLV ராக்கெட்டை வணிக நோக்கத்திற்காக தயாரித்து ஏவுவதுதான் எங்கள் அடுத்தகட்ட திட்டமாகும்.
வழக்கமான ராக்கெட்டுடன் ஒப்பிடும்போது SSLV மிகவும் எளிமையான வடிவமைப்பைக் கொண்டது. இதன் விண்ணில் ஏவப்படும் செயல்முறை முற்றிலும் வேறுபட்டது. SSLVஇன் முழு கட்டமைப்பு மற்றும் வடிவமைப்பும் வேறுபட்டது. அத்தகைய ராக்கெட்டுகளில் துல்லியமான செயற்கைக்கோளைப் பொருத்துவது சவாலானது. அனைத்து சவால்களையும் தீர்த்து இரண்டு வெற்றிகரமான பயணங்களைச் செய்து SSLV மேம்பாட்டுத் திட்டத்தை தற்போது நிறைவு செய்துள்ளோம். அடுத்ததாக ககன்யான் பணி தயாராகி வருகிறது. டிசம்பர் மாதத்தில் அதனை விண்ணில் ஏவுவதற்கு நாங்கள் இலக்கு வைத்துள்ளோம்.” என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025