டெல்லியில் நவ-1 முதல் டீசல் பேருந்துகள் நுழையத் தடை.!
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் அதற்கு முன்னதாகவே டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதால், காற்றின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், பிற மாநிலங்களில் இருந்து வரும் டெல்லியில் இயங்கும் அனைத்து டீசல் பேருந்துகளும் நவம்பர் 1ம் தேதி முதல் தடை செய்யப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கூறிய அவர், குளிர்கால செயல் திட்டத்தின் கீழ் டெல்லி அரசு செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி 397 ஆக இருந்த காற்றின் தரக் குறியீடு (AQI) நேற்று 325 ஆக இருந்தது. இது காற்றின் தரம் முன்னேற்றம் அடைந்துள்ளதைக் காட்டுகிறது. அதை மேலும் மேம்படுத்த முயற்சித்து வருகிறோம். எனவே, அடுத்த 15 நாட்கள் மிக முக்கியமானவை, அதற்காக நாங்கள் தயாராகி வருகிறோம்.” என்று கூறினார்.
தொடர்ந்து, டெல்லியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் மாசுக்களை ஏற்படுத்தும் எரிபொருளில் இருந்து இயற்கை எரிவாயுவுக்கு மாற்றப்பட்டுள்ளன. யாரேனும் மாசுபட்ட எரிபொருளைப் பயன்படுத்துகிறார்களா என்பதைக் கண்காணிக்கவும் குழுக்களை அமைத்துள்ளோம். அதோடு சிவப்பு சிக்னலின் போது வாகனத்தின் இன்ஜினை அணைக்குமாறு டெல்லி மக்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.” எனவும் கோபால் தெரிவித்துள்ளார்.
மேலும்கூறிய அவர், “தற்போது வாகனங்களால் ஏற்படும் மாசு அதிகரித்து வருகிறது. டெல்லியில் அனைத்து பேருந்துகளும் சிஎன்ஜியில் இயங்குகின்றன. 800க்கும் மேற்பட்ட மின்சார பேருந்துகளும் உள்ளன. இருந்தும் உத்திரபிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் என்சிஆர் பகுதிகளில் பிஎஸ் III மற்றும் பிஎஸ் IV டீசல் பேருந்துகள் இயங்குவதால் டெல்லியில் மாசு அதிகரித்து வருகிறது.”
“ஐஎஸ்பிடியில் ஆய்வு செய்ததில், உ.பி மற்றும் ஹரியானாவில் இருந்து இங்கு வந்துள்ள அனைத்து பேருந்துகளும் பிஎஸ் III மற்றும் பிஎஸ் IV பேருந்துகள் என்பது கண்டறியப்பட்டது. மின்சாரம் மற்றும் சிஎன்ஜியுடன் பேருந்துகள் எதுவும் அங்கிருந்து வரவில்லை. அதனால் ஹரியானா, உத்திரபிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் என்சிஆர் பகுதிகளில் இயக்கப்படும் டீசல் பேருந்துகளுக்கு முழுமையான தடையை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்த தடையால் என்சிஆர் மாநிலங்களில் இருந்து வரும் டீசல் பேருந்துகளின் ஓட்டுநர்கள் நவம்பர் 1 முதல் டெல்லிக்கு மின்சார, சிஎன்ஜி மற்றும் பிஎஸ்-6 பேருந்துகளை மட்டுமே கொண்டு வர முடியும். நவம்பர் 1ஆம் தேதி முதல் அனைத்து நுழைவுச் சாவடிகளிலும் போக்குவரத்துத் துறை மூலம் சோதனை நடத்தப்படும். விதிமுறைகளை பின்பற்றாத பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.