இன்ஜினியர் தினம் – சிறந்த தேச பொறியாளர் எம் விஸ்வேஸ்வரயாவுக்கு மரியாதை!
இன்று இன்ஜினியர்கள் தினத்தை ஒட்டி, தேசத்தின் சிறந்த பொறியாளராகிய எம்.விஸ்வேஸ்வரயா நினைவுகூரப்படுகிறார்.
நாம் ஒவ்வொருவருமே தற்போதைய நவீன காலகட்டத்தில் பயன்படுத்தக்கூடிய சாதாரண செல்போன் முதல் பெரிய வீட்டு உபயோகப் பொருட்கள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் ஆகிய அனைத்திலுமே ஏதோ ஒரு பொறியாளரின் கலை அமைந்துள்ளது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. நம்முடைய வாழ்க்கையில் கட்டிடம் கட்டுவதற்கு கூட நாம் பொறியாளர்களை தான் எதிர்பார்க்கிறோம். இந்நிலையில் இந்தியாவின் புகழ்பெற்ற பொறியாளரான விஸ்வேஸ்வரய்யா என்பவரின் பிறந்த தினமான இன்று இந்தியா முழுவதிலும் பொறியாளர் தினம் கொண்டாடப்படுகிறது. இவர் சிறந்த பொறியாளருக்கான பாரத ரத்னா விருதை 1955 ஆம் ஆண்டு பெற்றுள்ளார். இவரை நினைவு கூறும் விதமாக இன்று இந்தியா முழுவதிலும் பொறியாளர் தினம் கொண்டாடப்படுகிறது.
கர்நாடகாவில் உள்ள முட்டேனஹல்லி எனும் சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த இவர் பொறியியல் துறையில் மிகவும் சிறந்து விளங்கியுள்ளார். சமஸ்கிருத அறிஞர்களாகிய பெற்றோர்களுக்கு மகனாகப் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை கர்நாடகாவில் கற்ற பிறகு உயர்கல்விக்காக பெங்களூர் சென்று அங்கு இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். அதன் பின் புனே பொறியியல் கல்லூரியில் சிவில் என்ஜினீயரிங் பட்டம் பெற்றுள்ளார். இவரது நினைவாக புகழ் பெற்ற இந்தியாவின் 5 வது பொறியியல் கல்லூரி ஒன்றுக்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. கடினமாக உழைத்து படித்த இவர் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் நிர்வாக குழுவில் உறுப்பினராகவும் இருந்துள்ளார். 15 செப்டம்பர், 1860 இல் பிறந்த இவர், 12 ஏப்ரல், 1962 இல் உயிரிழந்துள்ளார்.