டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு.! ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கைது.!
டெல்லியில் கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டு, அதன் பிறகு அந்த கொள்கை திரும்ப பெறப்பட்டது. இந்த விவகாரத்தில் அரசுக்கு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மதுபான கொள்கை முறைகேடு வழக்குக் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் வீட்டில் இன்று அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சஞ்சய் சிங்கின் வீடு, அவர் தொடர்புடைய இடங்கள் , சஞ்சய் சிங் உதவியாளர் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இன்று அதிகாலை தொடங்கிய சோதனை முடிவில், தற்போது ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவர் தற்போது அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லபட உள்ளார். இதற்கு முன்னதாக, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த டெல்லி கலால் துறை முன்னாள் அமைச்சர் மணீஷ் சிசோடியா இதே வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் புதிய மதுபான கொள்கை மூலம் அரசு கட்டுப்பாட்டில் இருந்த மதுபான விற்பனையை 849 தனியார் மதுபான கடைகளுக்கு அனுமதி அளித்தது. அதன் பின்னர் இந்த கொள்கை திரும்ப பெறப்பட்டது. 2800 கோடி ரூபாய் வரையில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கின் கீழ் ஏற்கனவே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவிடமும் விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.