8 லட்சம் பெண்களுக்கும், 20 லட்சம் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு – காங்கிரஸ்

Default Image

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கையை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கூட்டாக வெளியிட்டனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் 7 கட்டங்களாக சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இதன்பின் பேசிய ராகுல்காந்தி, உத்திரப்பிரதேசத்தில் உள்ள இளைஞர்களிடம் கருத்து கேட்கப்பட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

8 லட்சம் பெண்களுக்கும், 20 லட்சம் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படும். இந்த தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகள் வெற்று வார்த்தைகள் கிடையாது. இந்தியாவுக்கான தொலைநோக்கு பார்வை என்பது உத்திரப்பிரதேசத்தில் இருந்து தொடங்க வேண்டும். நாங்கள் வெறுப்பை விதைக்க மாட்டோம். நாங்கள் மக்களை ஒன்றிணைக்கிறோம். இளைஞர்களின் வலிமையில் புதிய உத்தர பிரதேசத்தை கட்டமைக்க விரும்புகிறோம் என்று தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து தேர்தல் அறிக்கை குறித்து பேசிய பிரியங்கா காந்தி, உத்திரப் பிரதேச அரசின் மீது இளைஞர்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். யோகி ஆதித்யநாத் அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க தவறிவிட்டது. நாங்கள் ஜாதி, மதத்தை வைத்து பிரச்சாரம் செய்யவில்லை. உத்தர பிரதேசத்தின் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம் என கூறினார்.

உத்தரபிரதேசத்தில் காங்கிரேசின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, என்னை தவிர வேறு யாரும் தெரிகிறார்களா? என பிரியங்கா காந்தி சூசகமாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்த சட்டமன்ற தேர்தலில் 40 சதவீத பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் பிரியங்கா காந்தி கூறியிருந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.

இதனிடையே, கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் 403 இடங்களில், வெறும் 7 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இந்தமுறை நடைபெறவுள்ள தேர்தலில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டவர்களுக்கான தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்