தேர்தலில் இருந்து அடுத்தடுத்து விலகும் பாஜக வேட்பாளர்கள்…
Election2024 : குஜராத் வாததோரா தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ரஞ்சன் பட் தேர்தலில் இருந்து பின்வாங்கினார்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தலானது மொத்தமுள்ள 543 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் முதல் தேதி வரையில் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 26 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே மாதம் 7ஆம் தேதி நடைபெற உள்ளது.
குஜராத் தேர்தலில் வததோரா மக்களவை தொகுதியில் போட்டியிட ஏற்கனவே அந்த தொகுதியில் 2014 மற்றும் 2019 என இரண்டு முறை போட்டியிட்டு வெற்றிபெற்ற ரஞ்சன் பட் எனும் பெண் எம்பிக்கு பாஜக தலைமை 3வது முறையாக மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தது.
ஆனால் அந்த வாய்ப்பை ரஞ்சன் பட் மறுத்துள்ளார். சில தனிப்பட்ட காரணங்களுக்காக வரும் மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடவில்லை என தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் உள்ளூர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் கடந்த 10 நாட்களாகவே தேர்தல் போட்டியிடுவது பற்றி யோசித்து வந்தேன். இதனை தொடர்ந்து இன்று தேர்தலில் இருந்து பின்வாங்கியுள்ளேன். இருந்தும் பாஜக உறுப்பினராக தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் நான் ஈடுபடுவேன் என தெரிவித்தார்.
முன்னதாக, குஜராத் சபர்கந்தா தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிகாஜி தாகூர் என்பவரும் தான் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துவிட்ட்டார். இதே போல மேற்கு வங்கத்தில், அசன்சோல் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பவன் சிங் தேர்தலில் இருந்து சில வாரங்களுக்கு முன்னர் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.