துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!
Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு இன்று (ஏப்ரல் 19) வாக்குப்பதிவு நடைபெற்றது. மற்ற பகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 26ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
மணிப்பூரில் கடந்த மே மாதம் நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள் காரணமாக, இன்று நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்குச்சாவடிகளில் பல்வேறு பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அப்படி இருந்தும் சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.
மணிப்பூர் இம்பால் கிழக்கு பகுதியில் பிற்பகல் 2 மணியளவில் மர்ம நபர்களால் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 65 வயது நபர் ஒருவர் காயமடைந்தார். அதே போல மொய்ராங் சட்டமன்ற தொகுதியில் தமன்போக்பி பகுதியில் உள்ள வாக்குசாவடியில் புகுந்த மர்மநபர்கள் வாக்குசாவடியில் துப்பாக்கிசூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இம்பால் மேற்கு பகுதியில் ஒரு வாக்கு சாவடிக்குள் உள்ளே புகுந்த மரம் நபர்கள் வாக்கு இயந்திர EVM மிஷின்களை அடித்து நொறுக்கி தீ வைப்பு சம்பவங்களும் நடைபெற்றதால் அங்கும் பதற்றநிலை உருவானது. பல்வேறு பகுதிகளில் வாக்களிக்க பலர் வராத காரணத்தால் அப்பகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தே காணப்பட்டது என தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்தார். இருப்பினும் இறுதியாக 67.43 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காலை 7 மணிக்கு ஆரம்பித்த வாக்குப்பதிவு மாலை 4 மணியுடன் நிறைவுபெற்று விட்டது. அதன் பிறகு வந்தவர்களை அனுமதிக்கவில்லை என்றும். பின்னர் வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணிகள் நடைபெற்று முடிந்தது என்றும் தேர்தல் அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.