குஜராத் சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!
குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறார் தலைமை தேர்தல் ஆணையர்.
குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதியை இன்று பகல் 12 மணிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. டெல்லியில் நடக்கும் செய்தியாளர் சந்திப்பில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை அறிவிக்கிறார். சமீபத்தில் இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று குஜராத்துக்கு அறிவிக்கப்படுகிறது.
குஜராத் சட்டசபையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதன் காரணமாக குஜராத்தில் உள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது குஜராத்தில்பாஜக ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் பாஜக 99 இடங்களை கைப்பற்றி இருந்தது.
காங்கிரஸ் 77 இடங்களை பெற்று எதிர்க்கட்சியாக உள்ளது. இதனால் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் பாஜக காங்கிரஸ் இடையே தான் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த போட்டியில் ஆம் ஆத்மி கட்சியும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.