பிரதமர் மோடியின் ரூ.21 கோயில் காணிக்கை.., காங். பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியது என்ன.?
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரி மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ தேவநாராயண் ஜியின் 1111வது நினைவேந்தலில் கலந்து கொண்டார். அப்போது கோவில் காணிக்கையாக ஒரு தொகையினை செலுத்தினார். இந்த காணிக்கை விவரத்தை காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்து உள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 25இல் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ளதை அடுத்து, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கடந்த அக்டோபர் 20ஆம் தேதி தௌசாவில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில், பிரதமர் கோவிலுக்கு கொடுத்த காணிக்கை விவரத்தை பற்றி கூறினார்.
மேலும் ஒரு வழக்கில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கைது!
அதில், பிரதமரின் காணிக்கையை கோவில் நிர்வாகத்தினர் 6 மாதத்திற்கு பிறகு திறந்து பார்த்தனர். அதில் வெறும் 21 ரூபாய் இருந்தது. இது உண்மையா பொய்யா என தெரியவில்லை. இதனை நான் டிவியில் தான் பார்த்தேன். அந்த காணிக்கை போல தான் பெரிய வாக்குறுதிகளை அவர்கள் (பாஜக) கூறுகிறார்கள். ஆனால் தேர்தலுக்குப் பிறகு, இந்த வாக்குறுதிகள் ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது என விமர்சித்தார்.
ஒருவரின் கொள்கை, செயல்திட்டங்கள் , அரசியல் பாதை உள்ளிட்டவை குறித்தே விமர்சனம் செய்ய வேண்டும். தனிப்பட்ட விவகாரத்தை பொது வெளியில் விமர்சிக்க கூடாது என பாஜகவினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து இருந்தனர்.
இந்த புகாரின் பெயரில், தேர்தல் ஆணையம், பிரியங்கா காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிரதமரின் தனிப்பட்ட கடவுள் நம்பிக்கை விவகாரத்தை பொதுவெளியில் விமர்சித்தது குறித்து வரும் அக்டோபர் 30ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.