விவிபேட் வழக்கு : உச்சநீதிமன்றத்தின் கேள்விகளும்… தேர்தல் ஆணையத்தின் விளக்கங்களும்…
VVPAT Case : EVM மிஷின்களில் ஒருமுறை மட்டுமே புரோகிராம் பதிவேற்ற முடியும் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மூலம் தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணுகையில், VVPAT இயந்திரத்தில் பதிவாகும் வாக்கு ஒப்புகை சீட்டுகளையும் 100 சதவீதம் எண்ணவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல வழக்குகளில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளதாக கூறப்பட்டது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இறுதிக்கட்ட விசாரணை ஏற்கனவே முடிந்த பிறகு, தேர்தல் ஆணையத்திடம் முக்கியமாக சில கேள்விகளை நீதிபதி அமர்வு கேட்டு இருந்தனர். அதற்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு இருந்தனர். அதன்படி தேர்தல் ஆணைய அலுவலர் விளக்கம் அளித்துள்ளனர்.
கேள்வி : தேர்தல் இயந்திரத்தை கட்டுப்படுத்ததும் மைக்ரோ கண்ட்ரோலர் எனப்படும் முக்கிய பகுதி VVPAT (ஒப்புகை சீட்டு) இயந்திரத்தில் பொறுத்தப்பட்டுள்ளதா.? வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ளதா.?
விளக்கம் : வாக்குப்பதிவு இயந்திரம், VVPAT இயந்திரம், கண்ட்ரோல் யூனிட் ஆகியவை தனித்தனியே மைக்ரோகண்ட்ரோலர்களைக் கொண்டுள்ளன. அதனை வெளியில் இருந்து செயல்படுத்த முடியாது .
கேள்வி : மைக்ரோ கண்ட்ரோலர் எனப்படும் மின்னணு பகுதியில் ஒரு முறை மட்டுமே செயல்பாடுகளை (Program) உள்ளீடு செய்ய முடியுமா.? அல்லது மீண்டும் மாற்றி செயல்பாடுகளை (Program) உள்ளீடு செய்யலாமா.?
பதில் : மைக்ரோ கண்ட்ரோலரில் ஒரு முறை மட்டுமே புரோகிராமை பதிவேற்றம் செய்ய முடியும். மறுமுறை புரோகிராம் பதிவேற்றம் செய்ய முடியாது.
கேள்வி : ஒவ்வொரு கட்சி சின்னத்தையும் எவ்வாறு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தேர்தல் ஆணையம் பொருந்துகிறது. அந்த சின்னத்திற்கு பதிவான வாக்குகளை எப்படி பதிவு செய்து சேமிக்கப்படுகிறது.?
பதில் : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 1400 சின்னங்கள் வரையில் சேமித்து வைத்து கொள்ளும் வசதி உள்ளது. அதில் தனித்தனியே சின்னத்திற்கான வாக்குகள் பதிவாகி சேமிக்கப்படும்.
கேள்வி : தேர்தல் முடிந்த பிறகு, பதிவான வாக்குகள், இந்திய தேர்தல் சட்டத்தின்படி, 45 நாட்கள் வரை சேமித்து வைக்க வேண்டும். ஆனால் தேர்தல் ஆணையம் 30 நாட்கள் வரை மட்டுமே மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை சேமித்து வைப்பதாக கூறியுள்ளது. அது பற்றி விளக்கம் தர வேண்டும்.
பதில் : அனைத்து இயந்திரங்களிலும் 45 நாட்கள் வரையில் தரவுகளை சேமித்து வைக்கப்படும். 46வது நாளில், ஏதேனும் தேர்தல் முடிவுகள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றங்களின் உள்ள பதிவாளர்களுக்கு தலைமை தேர்தல் நிர்வாக அதிகாரி கடிதம் எழுதுவார். தேவைப்படும்பட்சத்தில் இயந்திரத்தில் உள்ள தகவல்கள் சேமித்து வைக்கப்படும்.
கேள்வி : வாக்குப்பதிவு முடிந்த பிறகு வாக்கு பதிவு இயந்திரம் , VVPAT சாதனங்கள் சேர்த்து சீல் செய்யப்படுகிறதா.? அல்லது தனித்தனியே சீல் செய்யப்படுகிறதா.?
பதில் : வாக்குப்பதிவுக்குப் பிறகு, EVM மிஷின், VVPAT இயந்திரம், கட்டுப்பாடு கருவி என மூன்றும் (BU, CU, VVPAT) சீல் வைக்கப்படும்.
என உச்சநீதிமன்றம் எழுப்பிய 5 கேள்விகளுக்கும் தேர்தல் ஆணையம் தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்துள்ளது. இரு தரப்பு வாதங்களையும் ஏற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளனர்.