தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கு தடை விதிப்பு
Election Commission of India: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கு தடை விதித்தது தேர்தல் ஆணையம்.
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை ஜூன் மாதம் 1ஆம் தேதி மாலை 6:30 மணி வரை வெளியிட இந்தியத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரையில் நான்கு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
இதனுடன் சேர்ந்து ஆந்திரா, அருணாச்சல், ஒடிசா, சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவை தேர்தலும், 12 மாநிலங்களில் 25 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடுவது தொடர்பில் தேர்தல் ஆணையம் சில தடைகளை விதித்துள்ளது.
அதன்படி, ஏப்ரல் 19-ம் தேதி, முதல் கட்ட தேர்தல் நடக்கும் நாள் முதல் கடைசி கட்டத் தேர்தல் முடிவடையும் ஜூன் 1-ம் தேதி மாலை 6.30 மணி வரை வரை வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், தேர்தல் பிரசாரம் ஓய்ந்தபிறகு எந்த கருத்துக்கணிப்பு முடிவுகளையும் ஊடகங்கள் வெளியிடக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடைபெறும்போது கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டால் அது மற்ற இடங்களில் தேர்தலில் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.