5 மாநில தேர்தல் ஒத்திவைப்பா? – தேர்தல் ஆணையம் ஆலோசனை!
மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷனுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை.
நாட்டில் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த சமயத்தில் கொரோனா பரவல் தொடர்பான ஒரு பொதுநல வழக்கில் ஒமைக்ரான் பரவலால் சட்டப்பேரவை தேர்தல்களை தள்ளிவைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும் என அலகாபாத் நீதிமன்றம் பரிந்துரைத்திருந்தது.
இதனையடுத்து, 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தள்ளிவைக்கப்படுமா என்று பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஓமைக்ரான் அதிகரித்து வருவதால், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷனுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். பாதுகாப்பான முறையில் தேர்தல் நடத்துவது, கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தகவல் கூறப்படுகிறது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கருத்து மற்றும் கொரோனா தொற்று, ஒமைக்ரான் அச்சுறுத்தல் உள்ளிட்டவைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.