ஒரு வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டி.! சட்டத்தை மாற்ற மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை.!
ஒரு வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிடுவதை தடுக்க மத்திய அரசு புதிய சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
நம் நாட்டில் நடைபெறும் தேர்தலில் ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அதே தேர்தலில் வேறு இடத்திலும் போட்டியிடலாம். இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் ஒரு தொகுதி பதவியை ராஜினாமா செய்து விடுவர். அதனால் அந்த பகுதிக்கு மீண்டும் தேர்தல் நடைபெறும்.
பெரும்பாலும், அரசியல் முக்கிய தலைவர்கள் தங்களது தோல்வியை தவிர்க்க இரு தொகுதிகளில் போட்டிடுவது வழக்கம். ஒரு தொகுதியில் தோற்றாலும், இன்னோர் தொகுதியில் வெற்றி பெற்று விடலாம் என போட்டியிடுவர்.
இது குறித்து மத்திய அரசுக்கு இந்திய தேர்தல் ஆணையம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது. அதாவது, ஒரு வேட்பாளர் ஒரே நேரத்தில் இரு தொகுதிகளில் போட்டியிடுவதால் , மறுதேர்தல் நடத்த வேண்டியுள்ளது. இதனால் தேர்தல் செலவு இரு மடங்காக உயர்கிறது.
இதனை தடுக்க மத்திய அரசு, தேர்தல் விதிமுறைகள் சட்டத்தில் புதிய விதிமுறைகளை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.