விவசாயம், கால்நடை, மீன்வளம் உள்ளிட்ட துறைகளுக்கான 8 முக்கிய திட்டங்கள்.!
விவசாயம், கால்நடை, மீன்வளம் உள்ளிட்ட துறைகளுக்கான 8 முக்கிய திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடி அறிவித்த, ரூ.20 லட்சம் கோடி நாட்டின் பொருளாதார மேம்பாட்டு சிறப்பு திட்டத்திற்கான அறிவிப்புகளை கடந்த இரு தினங்களாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். முதல்கட்ட அறிவிப்பில், சிறு, குறு நடுத்தர தொழில்களை மேம்படுத்துவற்கான திட்டங்களை அறிவித்திருந்தார். இதையடுத்து நேற்று 2 ம் கட்ட அறிவிப்பில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், சிறு விவசாயிகள், நடைபாதை வியாபாரிகள் ஆகியோருக்கான 9 முக்கிய திட்டங்கள் வெளியிட்டார். தற்போது, சுயசார்பு திட்டத்தில் 3ம் கட்ட அறிவிப்பில் விவசாயம், கால்நடை, பால்வளம், மீன்வளம் உள்ளிட்ட 11 துறைகளுக்கான திட்டங்கள் இன்று அறிவிக்கப்பட்டது. இதில் 8 அறிவிப்புகள் விவசாய உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்க்காக வெளியிடப்பட்டுள்ளது.
- விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் செய்வதற்கும், உள்கட்டமைப்பு மேம்படுத்துவதற்கும் ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.
- விவசாயப் பொருள்கள் சர்வதேச அளவில் விளம்பரப்படுத்த ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.
- குறு உணவு நிறுவனங்களை உருவாக்குவதற்காக ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.
- கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கீடு.
- கால்நடைகளுக்கான நோய் தடுப்பு திட்டத்துக்காக ரூ.13,343 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- மருத்துவ மூலிகை பயிர்களின் சாகுபடிக்காக ரூ.4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.
- தேனீ வளர்ப்பு மற்றும் தேன் உற்பத்தி ஆகியவற்றை ஊக்குவிக்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.
- மீன்வளத்துறையை மேம்படுத்துவதற்காக பிரதமரின் மீன்வளத் திட்டத்தில் ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.