இன்று முதல் அமல்… தங்க நகைகளில் 6 இலக்க HUID எண் கட்டாயம்!
இந்தியாவில் தங்க நகைகளில் 6 இலக்க HUID எண் மற்றும் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்பது இன்று முதல் அமல்.
இந்தியாவில் தங்க நகைகளில் 6 இலக்க HUID எண் மற்றும் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் அமலானது. ஹால்மார்க் எண் பெற்ற நகைகள் மட்டுமே விற்க வேண்டும் என இந்திய தர நிர்ணயம் ஆணையமான பிஐஎஸ் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் 26 மாவட்டங்கள் உட்பட நாடு முழுவதும் 288 மாவட்டங்களில் புதிய நடைமுறை அமலுக்கு வந்தது.
மாநிலத்தில் மொத்தம் 13,341 கடைகளில் ஹால்மார்க், HUID எண் கட்டாயம் என்பது இன்று முதல் அமலானது. 2 கிராம் நகை, ஆண்டுக்கு ரூ.40 லட்சம் குறைவாக விற்பனை செய்யும் நகைக்கடைகளுக்கு புதிய நடைமுறை பொருந்தாது. ஹால்மார்க் மூலம் நகையின் தரம், விற்பனை தொடர்பான வாடிக்கையாளர் தெரிந்து கொள்ள முடியும். Bureau of indian standards அமைப்பின் BISCARE APP-ல் 6 இலக்க எண்ணை பதிவிட்டு நகை விவரங்களை அறியலாம்.
லேசர் கட்டிங் முறையில் ஹால்மார்க் விவரங்களை தங்க நகைகளில் பதிவு செய்ய வேண்டும். எனவே, இன்று முதல் தங்க நகைகளில் ஹால்மார்க் முத்திரை, தங்கத்தின் தரத்துடன் (காரட்) 6 இலக்க HUID எண் கட்டாயமானது. வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தங்க நகைகளின் மீது 6 இலக்க HUID எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு நகைக்கடைக்கும் 6 இலக்க HUID எண் தனியாக வழங்கப்படும். ஹால்மார்க் உடன் 6 இலக்க HUID எண்கள் உள்ள தங்க நகைகளை மட்டுமே விற்க அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹால்மார்க் விதிமீறலில் ஈடுபடும் நகை கடைக்கு ரூ.1 லட்சம் அல்லது நகை விலையில் 5 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அபராதம் மட்டுமின்றி கடையின் உரிமையாளருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும் எனவும் ந்திய தர நிர்ணயம் ஆணையமான பிஐஎஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.