உ.பி : யூ-டியூப், இன்ஸ்டா பிரபலங்களுக்கு அடித்த ஜாக்பாட்.! மாதம் ரூ.8 லட்சம் வரை வருமானம்.!
உத்திரப் பிரதேசம் : மாநில அரசு திட்டங்களை மக்களிடம் இணைய வாயிலாக பிரபலப்படுத்தினால் அதற்கு அரசு ஊதியம் வழங்கும் மசோதாவுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய மாநில அரசுகள் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து அதனை செயல்படுத்தி வருகிறது. அந்த அனைத்து திட்டங்களும் மக்கள் மத்தியில் தெரிந்து இருக்குமா என்றால், அது சந்தேகமே. ஒவ்வொரு திட்டமும் தகுதி வாய்ந்த நபர்கள் அனைவரிடத்திலும் சரியாக சென்றடைவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. சில பிரதான திட்டங்களுக்கு மட்டுமே அரசு சார்பில் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.
இதனைக் கருத்தில் கொண்டு உத்திரப் பிரதேச மாநில அரசு, அரசு திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க ஓர் புதிய முயற்சியை கையிலெடுத்துள்ளது. தற்போது பெரும்பாலானோரது கையில் ஸ்மார்ட் போன்கள் உள்ளது. அதில் பெரும்பாலானோர் யூ-டியூப் ஷார்ட்ஸ், இன்ஸ்டா ரீல்ஸ் ஆகியவைகளில் பொழுதுபோக்குகின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டு, இன்ஸ்டா, யூ-டியூப் போன்ற சமூக ஊடகங்கள் வழியாக அரசுத் திட்டங்களை விளம்பரப்படுத்தும் ‘உத்திர பிரதேச டிஜிட்டல் மீடியா 2024’ எனும் சட்ட மசோதாவுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என மாநில தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் சஞ்சய் பிரசாத் அறிவித்துள்ளார்.
இந்த புதிய டிஜிட்டல் மீடியா 2024 சட்ட மசோதாவில், இன்ஸ்டா, யூ-டியூப், பேஸ்புக். டிவிட்டர் ஆகியவற்றில் அதிக ஃபாலோவர்களை கொண்டுள்ளவர்கள் அரசு திட்டங்களை தங்கள் இணையத்தில் விளம்பரப்படுத்தினால் மாதம் ரூ.2 லட்சம் முதல் ரூ.8 லட்ச ரூபாய் வருமானமாக மாநில அரசு சார்பில் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
அதாவது, எக்ஸ் (டிவிட்டர்), இன்ஸ்டா, பேஸ்புக் பிரபலங்கள் தங்கள் பக்கத்தில் அரசு திட்டங்களை விளம்பரப்படுத்தினால் அவர்களுக்கு மாதம், ரூ.5 லட்சம், ரூ.4 லட்சம், ரூ.3 லட்சம், ரூ.2 லட்சம் என அவர்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை மற்றும் அந்த விளம்பரதின் பார்வையாளர்கள் எண்ணிக்கை (வியூஸ்) ஆகியவை கணக்கில் கொண்டு நிர்ணயம் செய்யப்படும்.
அடுத்து, யூ-டியூப் (ஷார்ட்ஸ்), பிராட்கேஸ்ட் (Podcast) ஆகியவை மூலம் தங்கள் பக்கத்தில் அரசு திட்டங்களை விளம்பரப்படுத்தினால் மாதம் ரூ.8 லட்சம், ரூ.7 லட்சம், ரூ.6 லட்சம், ரூ.4 லட்சம் என மேற்குறிப்பிட்டபடி பின்தொடர்பவர்கள், விளம்பரத்தின் வியூஸ் ஆகியவை கணக்கிட்டு தொகை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
நல்ல திட்டங்களை மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்துவது போல, பொய்யான தகவல்களை பரப்புபவர்கள், ஆபாச கருத்துக்களை பதிவிடுபவர்கள் கண்டறியப்பட்டு அந்த சேனல்கள் முடக்கப்படுவதோடு அவர்களுக்கு சிறை தண்டனையும் விதிக்கும் நடைமுறை உத்திர பிரதேச டிஜிட்டல் மீடியா 2024 சட்ட வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.