தீபம் ஏற்றுவதே புண்ணியம். அதிலும் எத்தனை வகை தீபங்கள் ஏற்றி வழிபடுகிறோமோ, அதற்குத் தக்க பலன்களும் புண்ணியங்களும் உண்டு என்று ஆகம சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன!
ஒரு தீபமேற்றி வழிபட்டால், மனதில் அமைதி நிலவும். குழப்பங்கள் யாவும் விலகும்!
ஒன்பது தீபங்களேற்றி வழிபட்டால், நவக்கிரக தோஷங்கள் அனைத்தும் விலகிவிடும். தீயசக்திகள் அண்டாது. தேவதைகள் ஆசீர்வதிப்பார்கள். மகாலக்ஷ்மி, மகிழ்ந்து போய் அருள்வாள்.
12 தீபங்கள் ஏற்றி வழிபட்டால், ஜென்ம ராசியில் உள்ள தோஷங்கள் யாவும் நீங்கும். எதிர்ப்புகள் அழியும். எதிரிகள் ஒழிவார்கள். 18 தீபங்களேற்றி வழிபட்டால், இல்லத்தில் சர்வ சக்தியும் குடிகொள்ளும்!
27 தீபங்களேற்றி வழிபட்டால், நட்சத்திர தோஷங்கள் அனைத்தும் விலகும். 27 நட்சத்திரங்கள் மற்றும் ஒன்பது கிரகங்கள் ஆகியவற்றுக்காக 36 தீபங்களேற்றி வழிபட்டால், எடுத்த காரியம் யாவும் கைகூடும். திருமணம் முதலான தடைபட்ட காரியங்கள் அனைத்தும் விரைவில் நடந்தேறும்.
48 தீபங்களேற்றி வழிபட்டால், தொழில் வளரும், மனோபயம் நீங்கும். 108 தீபங்களேற்றி வழிபட்டால் நினைத்த காரியம் அனைத்தும் நடந்தேறும். நாமும் நம் சந்ததியும் செழிப்புடனும் சிறப்புடனும் வாழலாம்.
குறிப்பாக, இன்று 9ம் தேதி செவ்வாய்க்கிழமை. ராகுகால வேளை என்பது இன்றைய தினம் மாலை 3 முதல் 4.30 மணி வரை. இந்த ராகுகால வேளையில், கோயிலுக்குச் சென்று துர்கைக்கு அல்லது பெண் தெய்வங்களுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுவது இன்னும் சிறப்பு. முடிந்தால், எலுமிச்சை மாலை அணிவித்து வேண்டுங்கள். வெள்ளிக்கிழமை ராகுகால வேளையிலும் தீபமேற்றுங்கள். அம்பாள், அகம் குளிர்ந்து, நம் வாழ்வையே மலரச் செய்வாள்!
மன இருளை அகற்றி, உள்ளொளி பரப்பும் தீப வழிபாட்டை, தீபம் ஏற்றிச் செய்யும் பிரார்த்தனையை ஒருபோதும் கைவிடமாட்டாள் தேவி. நம் கண்ணீர் துடைக்க ஓடோடி வருவாள் மகாசக்தி!
source:
dinasuvadu.com